இந்தியா அணியால் தோற்கவில்லை.. தோல்விக்கு இது மட்டுமே காரணம்; டிம் சவுதி ஓப்பன் டாக்!! 

இரண்டாவது போட்டியில் தோல்வியைத் தழுவியதற்கு இதுதான் முக்கிய காரணம் என போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்துள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டம் துவங்குவதற்கு முன்பாகவே வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு இருந்து வந்தது. 

போட்டியின் முதல் பாதியில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. எனினும் நியூசிலாந்து துவக்க வீரர்கள் மார்டின் கப்தில் மற்றும் டெரில் மிட்சேல் இருவரும் தனது அதிரடியை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.2 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தது. மார்ட்டின் கப்தில் மற்றும் மிட்செல் இருவரும் தலா 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

சாப்மென்(21), பிலிப்ஸ்(34) இருவரும் நன்கு ஆடிய பிறகு ஆட்டமிழந்தனர். அதிரடியான தொடக்கத்திற்கு பிறகு நிச்சயம் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 180 ரன்களுக்கும் அதிகமாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் பின்னர் வந்த நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தனர். இன்றைய போட்டியில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல் போட்டியில் அபாரமாக பந்து வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வழக்கம் போல கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இன்றைய போட்டியில் இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 55 ரன்களும் 65 ரன்களும் விளாசினார். 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 155 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

இன்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பேட்டியளித்த டிம் சவுதி கூறுகையில், இன்றைய போட்டியில் அத்தனை பாராட்டுக்களும் இந்திய அணியைச் சேரும். முதல் 6 ஓவர்களில் எங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்திற்கு பிறகு முற்றிலுமாக கட்டுப்படுத்திவிட்டனர். அதற்குப் பிறகு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பிக் கொண்டனர். முதல் பாதியிலேயே பனிப்பொழிவு இருந்தது. இரண்டாவது பாதியில் மிகவும் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இந்திய அணி சிறப்பாக விளையாடிய போதும், இன்று பனிப்பொழிவு சற்று அதிகமாக காணப்பட்டதே எங்களது தோல்வியின் முக்கிய காரணமாக பார்கின்றோம். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இப்படி ஒரு பனிப்பொழிவு கண்டதில்லை. அடுத்த போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுவதை எதிர்நோக்கி உள்ளோம்.” என்றார்.