இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். போட்டிகள் (Indian Premier League- ‘IPL’) வரும் மார்ச் 31- ஆம் தேதி தொடங்கி, மே 28- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல்.


போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 10 அணிகள் விளையாடுகின்றனர்.
ஐ.பி.எல். சீசன் 16ஆவது கிரிக்கெட் தொடரின், முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன.


நடப்பு ஐ.பி.எல். போட்டிகளுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், காயம் காரணமாக, வீரர்கள் அடுத்தடுத்து ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஸ்டீவ் ஸ்மித், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கப் போவதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக வாருங்கள் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.


கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், 2012- ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காகவும், 2014, 2015. 2019- ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 2021- ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் உள்ள 103 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 2,485 ரன்களை குவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நமஸ்தே இந்தியா, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இணைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— Steve Smith (@stevesmith49) March 27, 2023
எனினும், ஸ்மித் எந்த அணிக்காக விளையாட உள்ளார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அவரை நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் எந்த அணிகளும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஸ்மித் வர்ணனையாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.