ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் காம்போ வேற லெவல்ல இருக்கும்; அப்போ விராட்கோலி நிலைமை?? கவாஸ்கர் கருத்து!!

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்திருப்பது, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தரும் என பெருமிதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

இந்திய அணிக்கு 2017 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்து வந்தார். தற்போது அவரது பதவி காலம் முடிவுற்றதால், அப்பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல், டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் விராட் கோலி. அவரது இடத்தை துணை கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா நிரப்பியிருக்கிறார். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை முடிவுற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் இருந்து டி20 போட்டிகளில் கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தற்காலிகமாக இருக்காது என தெரிகிறது. வரும் 2023 டி20 உலகக் கோப்பை வரை அவரே டி20 கேப்டனாக நீடிப்பார் என்பது தெரிகிறது.

ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவருக்கும் இடையேயான பிணைப்பு இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தரப்போகிறது என தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில், “ராகுல் டிராவிட் மைதானத்தில் இருந்தால், போட்டி இன்னும் முடிவடையவில்லை எனும் கருத்து அவரது காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

அதேபோல் கேப்டனாகவும் ஜொலித்தார். தற்போது தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருப்பதால், இந்திய அணிக்கு எவ்வித கவலையும் இல்லை. ‘டிராவிட் இருக்க பயமேன்’ என்பது விரைவில் நிஜமாகும். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமுறை கோப்பைகளை பெற்றுத்தந்த ரோகித் சர்மா, தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது நேர்மறையான சிந்தனைகளை கொடுக்கும்.

அங்கு சாதித்ததைப் போலவே இங்கும் பல சாதனைகள் நிச்சயம் புரிவார். ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா தற்போது இணைந்திருப்பது இந்திய அணிக்கு பக்கபலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல வெற்றிகளையும் பெற்றுத் தரப் போகிறது என எனக்கு தோன்றுகிறது.” என்று தனது கருத்தினை கூறியுள்ளார்.