“இவர்களை ஏன் எடுக்கல.. டீம் செலக்ஷன்ல முட்டாள்தனம் பண்ணீட்டிங்க” – இந்திய அணியை கடுமையாக விமர்சித்த நியூசிலாந்து முன்னாள் வீரர்!!

 முக்கியமான போட்டிகளில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து முட்டாள்தனம் செய்கிறீர்கள் என இந்திய அணியின் தேர்வு குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் ஸ்மித்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுற்ற பிறகு, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இதற்கான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற 25-ஆம் தேதி துவங்கவிருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை.

இதில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டு, வெளியில் இருக்கிறார். ஆகையால் முதல் போட்டியில் இந்திய அணியை அஜிங்கிய ரஹானே வழிநடத்துகிறார். கடந்த ஆறு ஏழு மாதங்களாக இந்திய வீரர்கள், இடைவிடாது போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை தொடர், ஐபிஎல் தொடர் என தொடர்ந்து ஓய்வில்லாமல் விளையாடி வருவதால், அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் ஒவ்வொரு தொடரிலும் வீரர்களை பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது.

எனவே நடந்து முடிந்த டி20 தொடரில் விராட் கோலி, முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த், ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது முற்றிலுமாக வரவேற்கத்தக்கது.

ஆனால் நியூசிலாந்து போன்ற பலமிக்க அணிகளை எதிர்கொள்ளும்போது, ரோகித் சர்மா மற்றும் விராத் கோலி போன்ற முன்னணி வீரர்களை வெளியில் அமர்த்துவது முட்டாள்தனமான முடிவு என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயான் ஸ்மித். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், 

“வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். அதற்காக முக்கிய போட்டிகளில் அவர்களை வெளியில் அமர்த்துவது மனதளவில் அவர்களது பேட்டிங்கை பாதிக்கின்றன. எந்த ஒரு வீரருக்கும் முக்கியமான போட்டிகளில் ஜொலிப்பது கனவாக இருக்கும்.

அப்படி அதில் சிறப்பாக ஆடினால், அடுத்தடுத்த போட்டிகளில் அவரது மன வலிமை அதிகரிக்கும். போட்டிகளை நடத்திக்கொண்டே வீரர்களுக்கு ஓய்வு அளிப்பதை விட, சரியான இடைவெளிகளில் போட்டிகளை நடத்தலாம். நடத்த வேண்டும் என்பதற்காக குறுகிய நாட்களில் நிறைய போட்டிகளை நடத்துவதில் எந்தப் பலனும் இல்லை.

எனவே ஓய்வு அளிப்பதை தவிர்த்து விட்டு இரு போட்டிகளுக்கு இடையேயான நாட்களை அதிகரிக்க வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்களை வெளியில் அமர்த்துவது முட்டாள்தனமாக தெரிகிறது. இப்போட்டிகளை பார்ப்பவர்களுக்கும் அது அதிர்ச்சி அளிக்கும். சுவாரஷ்யம் தராது.” என்றார்.