சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைமை பயிற்சியாளர் திடீர் விலகல்; இந்த புதிய அணிக்கு செல்கிறாராம்!!! 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி இருக்கிறார் டிரவர் பெலிஸ்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் டிரவர் பெலிஸ். அதன் பின்னர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகள் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று தனது தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் புதிதாக ஐபிஎல் தொடர்களில் இணைந்துள்ள லக்னோ அணியில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. முன்னதாக ரஷீத் கான் மற்றும் கேஎல் ராகுல் இருவரிடமும் லக்னோ அணி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தது. 

தலைமை பயிற்சியாளர் விலகியது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தில் இருந்து வெளிவந்த தகவலின்படி, டிரவர் பெலிஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது உண்மை. புதிய அணியை எதிர்நோக்கி அவர் காத்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இவரை நியமிக்க அதன் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. மேலும் லக்னோ போன்ற ஒருசில ஐபிஎல் அணிகளும் இவரை குறிவைத்து காய் நகர்த்துகிறது.

அதேபோல் உதவி பயிற்சியாளர் பதவியிலிருந்து ஆன்டி பிளவர் விலகியது குறித்து பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில், “ஆன்ட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக என்னிடம் கடிதம் அளித்தார். அதைப் பார்க்கையில் எனக்கு சற்று ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

புதிய அணியை கட்டமைப்பதற்காக முழுமையாக திட்டமிட்டு வருகிறோம். இந்த தருணத்தில் அவர் தனது முடிவினை தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் அவர் முடிவு செய்துவிட்டார். அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதால், முழுமையாக ஏற்றுக் கொண்டோம்.” என்றார். இவரும் லக்னோ அணியில் சேரவிருப்பதாக தகவல்கள் வருகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 16 கோடி வரை கேஎல் ராகுலுக்கு கொடுப்பதற்கு முடிவு செய்திருந்தது. ஆனால், அவர் பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதாக தனது முடிவினை தெரிவித்திருக்கிறார். லக்னோ அணி இவரை ஏலத்தில் எடுத்து கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருக்கும் தகவல்களும் வெளிவருகின்றன. அதேபோல் ஹைதராபாத் அணியின் ரஷீத் கான் எடுப்பதற்கும் லக்னோ அணி பேச்சுவார்த்தைகளை நடத்தியது குறித்த சர்ச்சைகளும் வெளிவருகின்றன.