ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்வதற்கு காரணம் இதுதான் என பேட்டியளித்திருக்கிறார் அதன் கேப்டன் ஆரோன் பின்ச்.
டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் பலப்பரிட்சை மேற்கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே ஒருமுறை டி20 உலகக் கோப்பை போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இது இரண்டாவது முறையாகும். ஆனால் நியூசிலாந்து அணிக்கு இதுவே முதல் இறுதிப்போட்டி.
இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி ரன்களை கட்டுப்படுத்தி துவக்கத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இறுதிவரை போராடி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 172 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அடுத்ததாக பேட்டிங் செய்யவந்த ஆஸ்திரேலிய அணிக்கு,கேப்டன் பின்ச் 5 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். வார்னர் மற்றும் மார்ஷ் இருவரும் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்தனர். வார்னர் 53 ரன்களில் வெளியேறினார். மிச்செல் மார்ஷ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். மேக்ஸ்வெல் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.5 ஓவர்களில் 173 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றபிறகு பரிசளிக்கும் நிகழ்வில் பேட்டியளித்த அதன் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில்,
“மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் ஆஸ்திரேலிய கேப்டன் என்பதில் மிகவும் பெருமிதமாக இருக்கிறது. ஒரு சில வீரர்களின் தனிப்பட்ட செயல்பாடு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், ஒட்டு மொத்த அணியாகவே நாங்கள் செயல்பட்டோம்.
வார்னர் பார்மில் இல்லை என்பதற்க்காக அவரைபோன்ற ஒரு வீரரை வெளியில் அமர்த்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தற்போது தான் யார் என்பதை அவர் உலகிற்கு
மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். என்னை பொருத்தவரை இந்த தொடரின் நாயகன் ஆடம் சாம்பா. முக்கியமான கட்டத்தில் அணிக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
குறிப்பாக இன்று மிச்செல் மார்ஷ் இன்று ஆடிய விதம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும், நிச்சயம் கோப்பை நமக்குத்தான் என்கிற எண்ணத்தையும் கொடுத்தது. இந்த தருணத்தில் ஸ்டாய்னிஸ் மற்றும் வேட் இருவரையும் பற்றி பேசியே ஆக வேண்டும். அரையிறுதிப் போட்டியில் அவர்கள் ஆடிய விதம் இறுதிப் போட்டியை விட முக்கியமானது. ஆகையால் இந்த இரண்டு வீரர்கள் இன்றைய வெற்றிக்கும் முக்கிய காரணமாக நான் பார்க்கிறேன்.” என்றார்.