விராட் கோலியின் கேப்டன் பதவியை பறித்துக்கொண்டு.. ட்விட்டரில் வாழ்த்தும் தெரிவித்த பிசிசிஐ; உச்சகட்ட டென்ஷனில் ரசிகர்கள்!!

விராட் கோலியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பிறகு, அவரது சேவைக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தது பிசிசிஐ. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆத்திரத்துக்கு உள்ளாகினர்.

அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு, இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 18 வீரர்கள் கொண்ட இந்த அணிக்கு விராட் கோலி தலைமைப் பொறுப்பை வசிக்கிறார். முதல் முறையாக, ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், ரகானே வசம் இந்த பொறுப்பு இருந்தது. ரகானேவின் சமிபத்திய செயல்பாடுகள் மிகவும் அதிருப்தியாக இருப்பதால், அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, ரோகித்சர்மா வசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் குறித்து தொடர்ந்து சந்தேகத்தில் இருந்து வந்தன. 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரை கருத்தில்கொண்டு ரோகித் சர்மாவை ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது. இதுகுறித்து தலைமை தேர்வுக்குழு அதிகாரிகள் கூறுகையில், “லிமிடெட் ஒவர் போட்டிகளுக்கு இரண்டு கேப்டன் இருந்தால், அணியில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவும். எனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ஒரே கேப்டன் இருப்பது மிகச் சரியாக இருக்கும் என்பதால் இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டது.” தெரிவித்திருந்தனர். 

விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இத்தகைய சூழலில் அவரை இந்த பொறுப்பிலிருந்து நீக்கி இருப்பது தவறான முடிவு என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். விராட் கோலி நீக்கப்பட்ட பிறகு, அவரது சேவைக்கு பிசிசிஐ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது.

“இந்திய அணியை ஆர்வம், நோக்கம் மற்றும் துடிப்புடன் வழிநடத்திச் சென்றதற்காக எங்களது வாழ்த்துக்கள். நன்றி கேப்டன் விராட் கோலி.” என பதிவிட்டிருந்தது. பிசிசிஐ-இன் பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலர் ஆத்திரத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்திய அணிக்காக 95 ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி, 65 போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ளார். இவரது வெற்றியின் சதவீதம் 70 க்கும் மேல் ஆகும். அதேபோல் விளையாடிய 19 இரு அணிகளுக்கு இடையேயான தொடரில் 15 தொடர்களை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.