இந்த மூன்று இளம் வீரர்களும் மிகத் திறமையானவர்கள் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.
ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தபோது, அணியில் இளம் வீரர்கள் உள்ளே எடுத்து வரப்பட்டு வலுவான அணியாக உருவாக்கப்பட்டது. அதேபோல் வேகப்பந்து வீச்சில் வரலாறு காணாத அளவிற்கு இந்திய அணி அச்சுறுத்தலாக திகழ்ந்தது. இதன் மூலம் பல வெற்றிகளையும் குவித்ததால், இந்திய அணி உச்சம் பெற்றிருந்தது. இருப்பினும் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்று ஒரு குறை மட்டுமே.
பல இளம் வீரர்கள் உள்ளே எடுத்துவரப்பட்டிருந்தாலும், இந்த 3 வீரர்கள் மீது ரவிசாஸ்திரி அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் அசாத்திய திறமை கொண்டவர்கள் என்று புகழும் அளவிற்கு பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.
“ரிஷப் பண்ட், சுப்மன் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மூவரும் இந்திய அணிக்கு 2, 3 வருடங்களாக விளையாடி வருகின்றனர். எந்த ஒரு சூழலிலும் பயமின்றி எதிர்கொள்கின்றனர். தங்களது முன்னோடி வீரர்களை போன்று சிறப்பான நோக்கம் கொண்டவர்களாக இவர்கள் இருந்தாலும், அவர்களைவிட அதிக அனுபவம் பெற்ற பிறகு இந்திய அணிக்கு விளையாடுகிறார்கள். இளம்வயதில் இத்தகைய அனுபவம் இவர்களுக்கு கிடைத்திருப்பதால் இக்கட்டான சூழலை சிறப்பாக எதிர்கொள்கின்றனர்.”என்றார்.
“ஐபிஎல் போட்டிகளின் மூலம் இளம் வீரர்களுக்கு எண்ணற்ற அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. பல வீரர்களுடன் டிரெஸ்ஸிங் ரூம் பகிர்ந்து கொள்வதால், இத்தகைய அனுபவம் அவர்களுக்கு கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். இந்திய வீரர்களுடன் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களுடனும் அவர்களுக்கு கிடைக்கின்ற அனுபவம் மிகப் பெரியது.” என்றார்.
ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அணிக்கு எடுக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா, அதிகபட்சம் இரண்டு வருடங்களில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து, உலகத் தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறார். ரிஷப் பண்ட் தனது அதிரடியின் மூலம் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். அவரும் இக்கட்டான சூழல்களில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு பக்கபலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.