டெஸ்ட் கேப்டன் பதவிக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. தூக்கிட்டு இந்த பையன போடுங்க; முன்னாள் வீரர் பேட்டியால் அணியில் மீண்டும் கிளம்பும் கேப்டன்ஷிப் சர்ச்சை!!??

ஜோ ரூட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டால் சரியாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. கேப்டன் பொறுப்பில் இருக்கும் ரூட் எடுத்த சில தவறான முடிவுகள் இங்கிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது. 

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றபோது, பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை. ஸ்பின் பந்துவீச்சு எடுபட்டது. ஆனால் அவர்களை உரிய இடத்தில் பயன்படுத்தவில்லை என இரண்டிலும் சொதப்பியதால் 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக ஜோ ரூட் கேப்டன் பொறுப்பு குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கிலாந்து அணிக்கு அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்த கேப்டனாக ஜோ ரூட் இருந்தாலும், சமீபத்திய செயல்பாடுகள் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. ஆகையால் இவரது கேப்டன் பொறுப்பு நீக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹேடின் கூறுகையில், “அதிக வெற்றிகளை கொடுத்த கேப்டனாக ஜோ ரூட் இருக்கலாம். ஆனால் நடைபெற்று வரும் தொடரில் அவரது கேப்டன் பொறுப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பந்துவீச்சு மைதானத்தில் பேட்டிங் தேர்வு செய்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பலான லென்தில் பந்துவீசி வரும்போது அவர்களை வழிநடத்திய விதமும் சரியில்லை. தாமாகவே முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

என்னை பொறுத்தவரை, பென் ஸ்டோக்ஸ் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். ஜோ ரூட் சில மணி நேரம் வெளியில் அமர்ந்திருந்த போது பென் ஸ்டோக்ஸ் கேப்டன் பொறுப்பு வகித்தார். அப்போது பந்துவீச்சாளர்களை சரியாக வழி நடத்தி, புல்-லேந்த் பந்துகளை அதிகளவில் வீச செய்தார். இதனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து ரன் குவிப்பில் திணறி வந்தது. ரூட்டை விட இவர் மிகச் சிறப்பாக கேப்டன் பொறுப்பு வகிக்கிறார். அடுத்தடுத்த போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்தால் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பலாம்.” என்று கருத்து தெரிவித்திருந்தார்.