பாகிஸ்தான் அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சனை ; தோல்வியே சந்திக்காத பாகிஸ்தானை வீழ்த்துமா ஆஸி…,!! அரையிறுதியில் இன்று பலப்பரிட்சை…!!!!

டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி சுற்று பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி, முதல் முறையாக உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.

அதேபோல் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலம்மிக்க அணிகளாக காணப்படுகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் அணி, சூப்பர் 12 சுற்றில் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியிடம் மட்டும் தோல்வியை தழுவி நான்கு வெற்றிகளுடன் இரண்டு அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை துவக்க வீரர்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் இருவரும் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர்.

பாபர் அசாம் ஐந்து போட்டிகளில் 4 அரை சதங்கள் விளாசி ரன் குவிப்பில் முதலிடத்தில் இருக்கிறார். அந்த அணிக்கு பந்துவீச்சு கூடுதல் பலமாக இருக்கிறது. இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி இந்திய அணிக்கு எதிராக மட்டுமல்லாது; நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராகவும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அரையிறுதிப் போட்டியிலும் அவரது பந்துவீச்சு கவனம் ஈர்க்கக் கூடியதாக இருக்கும். 

மற்றொருபுறம் ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் வார்னர் மீண்டும் பார்மிற்கு வந்திருக்கிறார். அவர் 5 போட்டிகளில் 187 ரன்கள் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அவர் கொடுத்து வந்தாலும், கேப்டன் பின்ச் சற்று தடுமாற்றத்துடன் ஆடி வருகிறார்.

பந்துவீச்சை பொறுத்தவரை, ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும்,  இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு வீசவில்லை. ரன்களை விட்டுக்கொடுக்கிறார். அதேநேரம் கம்மின்ஸ் மற்றும் ஹேசல்வுட் இருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். ஆடம் ஜாம்பா தொடர்ந்து கட்டுக்கோப்பாக பந்து வீசி வருகிறார். 11 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். 

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் இரு அணிகளும் மிகுந்த பலம் பொருந்திய அணியாக இருக்கிறது. ஆகையால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமிருக்காது. 

பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு முறை கோப்பையை வென்றிருக்கிறது. ஒருநாள் உலக கோப்பைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலிய அணி இதுவரை ஒருமுறைகூட டி20 உலக கோப்பையை வெல்லவில்லை என்பதால், இம்முறை நிச்சயம் இறுதிப் போட்டிக்குச் சென்று கோப்பையை வெல்லும் முனைப்பில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்படும் ஆஸ்திரேலிய அணி :

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

கணிக்கப்படும் பாகிஸ்தான் அணி :

முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப், ஷகீன் ஷா அப்ரிடி.