இம்பாக்ட் பிளேயர் விதி சாதகமா..? இல்லையா..?- தோனி அளித்த சுவாரஸ்ய பதில்!

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மார்ச் 31) மாலை 07.00 மணிக்கு பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு தான் ஐ.பி.எல். தொடக்க விழா, கோலாகலமாக நடைபெற்றதை அடுத்து, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற முதல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது குஜராத் அணி. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்களையும், மொயின் அலி 23 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களையும், அம்பதி ராயுடு 12 ரன்களையும், சிவம் துபே 19 ரன்களையும், தோனி 14 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி, ராஷித் கான், ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டாஸ் போடும் போது பேசிய கேப்டன் தோனி, “தாங்களும் முதலில் பந்து வீச தான் நினைத்தோம். மற்ற மைதானங்களை காட்டிலும், நரேந்திர மோடி மைதானம் இரண்டு மடங்கு பெரியது. எனவே, வழக்கத்தை விட அதிகளவில் குவிந்துள்ள ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் போட்டி விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் பயிற்சியை மேற்கொண்டோம்.

பயிற்சிக்கு நடுவே நாங்கள் ஓய்வையும் எடுத்துக் கொண்டோம். இம்பாக்ட் பிளேயர் விதி கேப்டனுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், மைதானத்திற்கு தகுந்தவாறு வீரர்களை மாற்ற முடியும். எனவே, என்னை பொறுத்த வரைக்கும் இந்த விதி சாதகமானது தான்” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here