“அவங்க ரொம்ப வீக்.. நம்ம ஜெயிக்க இதுதான் சரியான டைம்”; இந்திய அணிக்கு செம்மையான ஹிண்ட் கொடுத்த ஹர்பஜன்!!

தென்னாபிரிக்க அணி பலவீனமாக இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இதுதான் சரியான வாய்ப்பு என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவுற்ற உடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை கொரோனா தீவிரமாக பரவி வருவதால், இந்த தொடர் நடைபெறுமா? என்ற சிக்கல் நிலவி வந்தது.

இதில் தலையிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி, தென்னாப்பிரிக்க சுகாதாரத்துறை மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்திய வீரர்களுக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படும் என அதன் கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்ததால், தற்போது தொடரை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய டெஸ்ட் வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 18 வீரர்கள் கொண்ட அணிக்கு விராட் கோலி கேப்டன் பொறுப்பிலும், ரோகித் சர்மா துணை கேப்டன் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற டிசம்பர் 26ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. தென்னாப்பிரிக்கா சென்று அதன் மண்ணில் இந்திய அணி ஒருமுறைகூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. கடைசியாக 2011ம் ஆண்டு சமன் செய்ததே அதிகபட்சம் ஆகும்.

2006 ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் அந்த தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்ததாக 2011ஆம் ஆண்டு 1 – 1 என சமன் செய்தது. பின்னர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. கடைசியாக 2018ஆம் ஆண்டு 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. 

இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சரியான வாய்ப்பு இதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“முன்னதாக தென்னாப்பிரிக்க அணியில் ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசியாக நடந்த டெஸ்ட் தொடரில் டிவில்லியர்ஸ், டுப்லஸ்ஸிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது தென்னாபிரிக்க அணியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு பேட்ஸ்மேன்கள் இல்லை. பந்து வீச்சாளர்களும் திணறடிக்கும் அளவிற்கு இல்லை. ஆகையால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி தொடரை கைப்பற்றலாம். இதுதான் சரியான வாய்ப்பு.” என்று தனது கருத்தினை பதிவிட்டிருந்தார்.