டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு கிடைத்தால் எனது செயல்பாடு இப்படித்தான் இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபூச்சானே பேசியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபூச்சானே கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட்டபோது இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக ஆடியதால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடித்தார். கடந்த 2019ம் ஆண்டு மற்றும் 2020ம் ஆண்டு இரண்டும் இவருக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக உருவெடுத்திருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வரும் டிம் பெயின் தலைமையில், அந்த அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. இவர் தலைமையில் விளையாடிய 23 டெஸ்ட் போட்டிகளில் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது. அதாவது வெற்றி சதவீதம் 50க்கும் குறைவாக இருக்கிறது. இதனால் விரைவில் கேப்டன் பொறுப்பை மாற்றுவது குறித்து ஆஸி., கிரிக்கெட் வாரியத்தில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என ஆலோசித்தபோது, ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் கேப்டன் பொறுப்பை ஏற்க முடியாத சூழல் நிலவி வருகிறது. ஆகையால் அவர்களுக்கு அடுத்ததாக நன்கு செயல்பட்டு வரும் மார்னஸ் லபூச்சானே கேப்டனாக இருந்தால் சரி வருமா?? என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இதுகுறித்து மார்னஸ் லபூச்சானே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டியின் போது, “நான் கேப்டன் பொறுப்பை ஏற்க மிகவும் விரும்புகிறேன். எனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பேன். அதேநேரம் கேப்டன் பொறுப்பு கிடைத்துவிட்டது என்பதனால் எனது பேட்டிங் செயல் மாறாது; குறைந்தும் விடாது. பேட்டிங் பொறுத்தவரை இயல்பாகவே செயல்பட விரும்புகிறேன்.
தன் விளையாடும் அணி இக்கட்டான சூழலில் இருந்தால் எந்த ஒரு வீரரும் கிடைக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார் அப்படித்தான் நானும். இப்படி ஒரு தருணத்தில் அணிக்கு நான் சரியாக இருப்பேன் என கிரிக்கெட் வாரியம் விரும்பினாள் நானும் அதை முழு மனதுடன் எடுத்து எனது முழு பங்களிப்பையும் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கிறேன். எனது தனிப்பட்ட சாதனையை விட அணியின் தேவைக்கு பங்களிக்கவே நான் விரும்புகிறேன்.” என குறிப்பிட்டார்.
மார்னஸ் லபூச்சானே இதுவரை ஆடிய 18 டெஸ்ட் போட்டிகளில் 1885 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 அரை சதங்களும் 5 சதங்களும் அடங்கும்.