இந்தியாவை ஆடுவது கடினம் என நினைத்தேன்.. ஆனால்..; கென் வில்லியம்சன் ஓபன் டாக்!!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் மிகவும் அச்சுறுத்துவதாக இருந்தது. சமாளித்துவிட்டோம் என மனம் திறந்து பேசியிருக்கிறார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடந்து முடிந்தது. இப்போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

155/9 என நியூசிலாந்து அணி தடுமாறி வந்தது. ஐந்தாம் நாள் முடிய இன்னும் 9 ஓவர்கள் மீதும் இருக்க இந்திய அணி ஒரு விக்கெட் எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும். துரதிஸ்டவசமாக ஒரு விக்கெட்டை எடுக்க தவறியதால், ஆட்டம் டிராவில் முடிந்தது. நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்திருந்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், 

“கிட்டத்தட்ட தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்தோம். ஒட்டுமொத்தமாக சிறப்பான ஆட்டமாக அமைந்தது. கடைசி கட்டத்தில் ரச்சின் மற்றும் அஜாஸ் பட்டேல் இருவரும் காட்டிய மனநிலை, அணியை சரிவில் இருந்து மீட்டிருக்கிறது. அதேபோல் துவக்கத்தில் ஷோமர்வில் ஆடிய விதமும் மிகுந்த நம்பிக்கை அளித்திருக்கிறது.

இந்த போட்டி முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்கள் அளித்த பங்களிப்பு இன்றியமையாதது. ஒரு வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் விளையாடியது பின்னடைவாக தெரிந்தாலும், இருக்கும் இருவரும் எந்தவித தவறும் இன்றி முழு பங்களிப்பை கொடுத்தனர். இறுதியில் இந்த போட்டியில் இருந்து கிடைத்த அனுபவம் மட்டுமே எங்களிடம் இருக்கிறது. 

பலம் மற்றும் அனுபவமிக்க இந்திய அணியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதுவும் இந்திய மண்ணில். ஆகையால் இந்த அனுபவம் இளம் வீரர்களுக்கு முக்கியமானதாக அமையும். மீண்டும் புதிய போட்டிகாகவும் புதிய மைதானத்திற்காகவும் தயாராக வேண்டியுள்ளது. இந்திய அணியை எதிர் கொள்வது சற்று கடினமாக இருந்தாலும்,  வீரர்கள் ஆடிய விதம் சற்றும் சளைத்தது இல்லை.” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போட்டிக்காக இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி இணையவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.