அம்பயர்கிட்ட எவ்ளவோ பேசினேன்.. வேற என்ன பண்றது முடிவு பண்ணிட்டாரு; புலம்பிய ரஹானே!!

எவ்வளவோ முயற்சித்தேன். இருந்தாலும் இப்படி நடந்துவிட்டது என போட்டி முடிந்த பிறகு மனம் விட்டு பேசியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இடம் பெறாததால், கேப்டன் பொறுப்பு வகித்தார் அஜிங்கிய ரஹானே. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்கள் அடித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 105 ரன்கள் அடித்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 

49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் 283 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர் லேதம் அரைசதம் அடித்தார். சோமர்வில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரை தவிர, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்றது. ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைய இன்னும் 9 ஓவர்கள் மீதமிருக்க இந்திய அணி ஒரு விக்கெட் வீழ்த்தி நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரச்சின் மற்றும் அஜாஸ் பட்டேல் இருவரும் அணியை தோல்வியில் இருந்து மீட்டு டிரா செய்தனர்.

போட்டி முடிந்த பிறகு வருத்தமுடன் பேட்டி அளித்த ரஹானே கூறுகையில், “முடிந்தவரை முயற்சித்தோம். நியூசிலாந்து வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். சிறந்த கிரிக்கெட் போட்டியாக இது அமைந்திருக்கிறது. முதல் செஷனில் விக்கெட் விழாமல் சற்று தடுமாறினாலும், அடுத்த செஷனில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பங்களிப்பை கொடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை அளித்தனர். ஆட்டம் கைமீறிச் சென்றது வருத்தமளிக்கிறது. 

நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் விக்கெட்டுகள் விழ வேண்டும் என்பதற்காக போட்டியை டிக்ளேர் செய்தோம். அப்போது 5 அல்லது 6 ஓவர்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் வெளிச்சம் இன்மை காரணமாக பின்னடைவாக அமைந்தது. இன்றைய நாள் துவக்கத்தில் விக்கெட் விழாமல்போனது பின்னடைவாக அமைந்தது. இன்றைய ஆட்டத்தில் போதிய வெளிச்சம் இருந்தபோதும், நடுவரிடம் தொடர்ந்து வினவி வந்தேன். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. ஆகையால் அதனை சரி என்று ஒப்புக்கொண்டேன். 

ஸ்ரேயாஸ் அய்யருக்கு முதல் போட்டி இவ்வளவு சிறப்பாக அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த போட்டியில் அவர் இடம்பெறுவது குறித்து என்னால் எதுவும் கூற இயலாது. விராட்கோலி மீண்டும் அணியில் இணைந்து விடுவார். அதன்பிறகு இதுபற்றி முடிவு செய்யப்படும்.” என்றார்.