வான்கடே மைதானத்தில் புதிய ட்விஸ்ட்.. இந்திய அணிக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது; வெளியான திடுக்கிடும் பிட்ச் ரிப்போர்ட்!!

வான்கடே மைதானத்தின் பிட்ச் எவ்வாறு இருக்கும் என்று சற்றுமுன் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி துரதிஸ்டவசமாக, இந்திய அணியின் கையிலிருந்து நழுவி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 3ஆம் தேதி வான்கடே மைதானத்தில் துவங்குகிறது.

வான்கடே மைதானம் பெரிதளவில் பேட்டிங் மற்றும் சுழல் பந்துவீச்சுக்கு எப்போதும் சாதகமாக அமையும். அந்த வகையில் இந்திய அணி சுழல் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இரண்டாவது போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு சர்வதேச போட்டிகள் வான்கடே மைதானத்தில் உள்ள முக்கியமான மூன்று களத்தில் நடக்கவில்லை. இதன் காரணமாக பிட்ச் மீது அதிகமான புற்கள் வளர்ந்துள்ளன. வழக்கத்திற்கு மாறாக அதிக புற்கள் வளர்ந்து இருப்பதால், பந்தில் டர்ன் குறைவாக இருக்கும். ஆகையால், சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்படியும் போட்டி நடப்பதற்கு முன்பாக புற்கள் வெட்டப்படும். இருப்பினும் அதிக அளவில் வெட்டபடமாட்டாது என்பதால், வழக்கமான பிட்சாக இருக்காது. மேலும் புற்கள் காரணமாக பனி பொழிவும் சற்று தென்படும். முந்தைய நாள் இரவில் பனி படிந்திருப்பதன் காரணமாக காலை நேரத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும். இரண்டாவது மற்றும் மூன்றாவது செஷனில் ஆட்டம் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக இருக்கும். 

முன்பைவிட மைதானத்தின் போக்கு தற்போது மாறியிருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சரியான வீரர்களை தேர்வு செய்ய இரு அணிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதல் போட்டியில் இவ்விரு அணிகளும் தலா மூன்று ஸ்பின்னர்கள் வைத்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது போட்டி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு சாதகமாக அமையலாம். இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று தெரிகிறது.