டாப் 3-க்குள் நுழைந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின்!! ஹர்பஜன் சிங்கை ஓரம்கட்டி பந்துவீச்சில் புதிய சாதனை!! 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த ஜாம்பவான்கள் பட்டியலில் முன்னேறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 345 ரன்கள் எடுத்திருந்தது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் விளாசினார். சுப்மன் கில் மற்றும் ஜடேஜா இருவரும் அரைசதம் அடித்திருந்தனர். அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணிக்கு அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

49 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி துவக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் துவங்கியது. நன்கு விளையாடி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் கடந்தார். இவர் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த விருத்திமான் சஹா 60 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி துவங்கும் முன்னர் இந்திய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 413 விக்கெட்டுகள் உடன் நான்காவது இடத்தில் இருந்தார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகள் எடுத்து மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் மொத்தம் 418 விக்கெட்டுகள் உடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் 619 விக்கெட்டுகள் உடன் அனில் கும்ப்ளே இருக்கிறார். இரண்டாவது இடத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் 434 விக்கெட்டுகள் உடன் இருக்கிறார். தற்போது அஸ்வின் 418 விக்கெட்டுகள் உடன் 3-வது இடம் பிடித்திருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 284 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.