விராத் கோலி உள்ளே வந்தால் ஸ்ரேயாஸ் அய்யக்கு தான் பாதிப்பு என்று புதிய திருப்பங்களை தெரிவித்திருக்கிறார் விவிஎஸ் லக்ஷ்மன்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர், அறிமுக போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் விளாசி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்திருக்கிறார். மாற்று வீரராக உள்ளே வந்த அவருக்கு இது சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியாக அமைந்தது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என பலரும் நினைத்து வருகின்றனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் நிலைத்திருப்பது கடினம் என்றவாறு பேசியிருக்கிறார் விவிஎஸ் லக்ஷ்மன். முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவர் மீண்டும் அணியில் இணைந்தால் யாருடைய இடம் பாதிக்கப்படும் என்பது குறித்தும் அவர் பேசியிருக்கிறார்.
“முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், ரஹானே இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. அதேநேரம் ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே இத்தகைய பல சாதனைகளை படைத்திருக்கிறார். இருப்பினும் இந்திய அணியில் ஒரு சீனியர் வீரருக்கு பதிலாக இளம் வீரர் உள்ளே விளையாடினால், மீண்டும் சீனியர் வீரர் அணிக்கு திரும்பும்பொழுது இளம் வீரர் வழிவிட வேண்டும்.
இது எழுதப்படாத விதியாக உள்ளது. இரண்டாவது போட்டியில் ரகானே துணை கேப்டனாக இருப்பதால் வெளியில் அமர்த்தப்படுவர் என்று எனக்கு தோன்றவில்லை. அதேபோல் கேஎல் ராகுல் அணியில் இல்லாததால், மயங்க் அகர்வால் வெளியில் அமர்த்தப்படுவார் என்றும் நான் நினைக்கவில்லை.
எனவே மீதமிருப்பது ஸ்ரேயாஸ் தான். கோஹ்லி உள்ளே வந்தால், ஸ்ரேயாஸ் அய்யர் வெளியில் அமர்த்தப்பட அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில்,
“விராட் கோலி மீண்டும் அணிக்குள் வரும்பொழுது யாரை மாற்றுவோம்? யார் மீண்டும் இடம் பெறுவார்? என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். மும்பை சென்ற பிறகு இதற்கான ஆலோசனைகள் நடத்தப்படும். தற்போது முதல் போட்டியில் வெற்றி பெறுவதே எங்களது முழு கவனமாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.