ச்ச.. நல்லா விளையாடியும்.. கொண்டாட முடியாம போச்சே; ஸ்ரேயாஸ் அய்யர் வருத்தம்!!

முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருந்தால் என் மனநிலை இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார் ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் எடுத்தது. முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் தனது அறிமுக போட்டியில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.

முதல் இன்னிங்சில் இவர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணியை விட 49 ரன்கள் பின்தங்கி இருந்தது. முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. 

51 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணியை நிதானத்துடன் விளையாடி சரிவிலிருந்து மீட்டார் ஸ்ரேயாஸ் அய்யர். இவருக்கு பக்கபலமாக இருந்த அஸ்வின் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 234 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 283 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஒருகட்டத்தில் 155 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் விழுந்திருந்தது. மீதமிருக்கும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணி வென்றுவிடும் என நினைத்திருந்தபோது, துரதிஷ்டவசமாக இறுதிவரை விக்கெட் எடுக்க முடியாமல் போட்டி டிராவில் முடிந்தது. 

முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் ஸ்ரேயாஸ் அய்யர். அப்போது பேசிய அவர் கூறியதாவது: 

இந்திய அணி இந்த போட்டியை வென்றிருந்தால் எனது கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். அனைவரும் என்னை பகட்டுத்தனமாக விளையாடுவேன் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது உள் உணர்வை நான் ஒருபோதும் தடை செய்ததில்லை. நான் நினைத்ததெல்லாம் அதிக பந்துகள் விளையாட வேண்டும் என்பதுதான். அதனை சரியாக செய்து கொண்டிருந்தேன்.

அஸ்வின் மற்றும் சகா இருவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது மிகுந்த நம்பிக்கையாக இருந்தது. முதல் போட்டியில் ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மைதானத்தில் எப்போதும் மிகுந்த அழுத்தம் இருக்கும். அப்படி ஒரு தருணத்தில் எதற்கும் செவி சாய்க்காமல் முழு கவனத்துடன் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த மைதானத்தில் வீரர்கள் தங்களது முழு செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக நான் உணருகிறேன். இந்திய அணி எந்த தவறையும் செய்யவில்லை. முடிவு சாதகமாக அமையாது சற்று வருத்தம் அளிக்கிறது என்றார்.