இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுமா? என்பது குறித்து தெரிவித்திருக்கிறார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணி தென்னாபிரிக்கா செல்வதற்கு முன்பாக, இந்தியா ஏ அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருந்தது.
தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் புதுவகையான கொரோனா தீவிரமாக பரவி வருவதால், தற்காலிகமாக இந்திய ஏ அணி விளையாடும் டெஸ்ட் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்ததாக இந்திய அணி அங்கு சென்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்குமா? என்ற சந்தேகங்கள் எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்திய அணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வீரர்கள் தனிமைப்படுத்துதலை தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.
மேலும் தென் ஆப்பிரிக்க நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகமும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க இருப்பதாகவும் பிசிசிஐக்கு தகவல் அனுப்பியிருக்கிறது. பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தநிலையில், தற்போது பிசிசிஐ தலைவர் கங்குலி இது குறித்து பேசியிருக்கிறார். “தற்போது வரை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
திட்டமிட்டபடி போட்டிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் தனிப்பட்ட முறையில் நான் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவர்களும் போதிய ஏற்பாடுகள் செய்து தருவதாக கூறினார். இன்னும் சில நாட்களில் வீரர்களிடம் இது குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது. பின்னர் தென்னாப்பிரிக்கா செல்வது குறித்து முடிவு செய்யப்படும்.
தற்போது வரை போட்டிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இன்னும் சில நாட்களில் கொரோனா பரவல் அதிகரித்தால் மட்டுமே தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும்.” என்றார். மேலும் பேசிய அவர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது வீரர்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர். ஆகையால் அங்கு சென்று ஓரிரு நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவர் என்றும் அவர் தெரிவித்தார்.