மீண்டும் நீக்கப்பட்ட நட்டு..! வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு காரணம் உண்மையில் இதுதானா???

நியூசிலாந்து அணியுடனான தொடரில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை. அவருக்கு ஏன் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான காரணத்தை நாம் இங்கு காண்போம்.

துரதிஸ்டவசமாக, டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அளவிற்கு வலிமைமிக்க அணியாக காணப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றிலேயே வெளியேறியது பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இதற்கு ஐபிஎல் போட்டிகள் தான் காரணம் என தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

ஏனெனில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக போதிய காலங்கள் இல்லை. வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்ததால் முறையான ஓய்வும் இல்லை என்று கூறப்பட்டுகிறது. அதேநேரம் பல முன்னணி வீரர்களும் மூத்த வீரர்களும் தாங்கள் வைக்கும் விமர்சனத்தில், நடந்தது நடந்துவிட்டது; தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த தொடர்களில் கவனம் செலுத்துவோம் என ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடைபெறும் நியூசிலாந்து அணியுடனான தொடரில் பங்குபெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ தரப்பு கடந்த நவம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த அணியில்  தமிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இது குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. அவர் ஏன் நீக்கப்பட்டு இருக்கலாம் என்பது குறித்த சில கணிப்புகளை நாம் இங்கே காண்போம். 

நடராஜன் நீக்கம் ஏன்?? – கணிப்பு

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் நடராஜன் பங்கேற்கவில்லை. அறுவை சிகிச்சை செய்த பிறகு, உடல்நலம் தேறி மீண்டும் அவர் பயிற்சியில் இறங்கினார். தற்போது சையது முஸ்தக் அலி தொடரில் தமிழக அணிக்காக விளையாடி வரும் நடராஜன், திருப்தியளிக்கும் அளவில் பந்து வீசவில்லை.

சராசரியாக ஓவருக்கு பத்து ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து வருகிறார். அவரது பந்துவீச்சில் துல்லியமும் சற்று குறைந்து விட்டதாக தெரிகிறது. ஆகையால் அவருக்கு இன்னும் சில காலம் பயிற்சிகள் தேவை என நினைத்திருக்கலாம் என்பதால் நியூசிலாந்து அணியுடனான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை என கணிக்கப்படுகிறது. 

சையது முஸ்தக் அலி தொடரில் கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார். மற்ற இரண்டு போட்டிகளிலும் இதே நிலையில்தான் அவர் பந்துவீசி இருந்தார். இதுவும் அவர் நீக்கப்பட்டிருக்க காரணமாக இருக்கலாம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் வருகிற 17ஆம் தேதி ஜெய்ப்பூர் மைதானத்தில் துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.