இவர்களுக்குள் இப்படியொரு நட்பா…?? தனது பாணியில் ரவி சாஸ்திரிக்கு டாட்டா சொன்ன கோஹ்லி..!!! 

ரவி சாஸ்திரியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், தனது பாணியில் ட்விட்டர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. 

இந்திய அணியின் அப்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவின் பதவி காலம் முடிவுற்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கிரிக்கெட் ஆலோசனை குழுவால் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். அவர் அணியில் இணைந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நல்ல முன்னேற்றம் கண்டது. மேலும் விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி இருவருக்கும் இடையேயான நட்பு அணிக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருந்தது. ஆனால், பிசிசிஐ தரப்பால் மேலும் 45 நாட்கள் அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை முடிந்த பிறகு புதிய பயிற்சியாளர் பற்றி யோசிக்க படும் எனக் கூறப்பட்டது. இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி உடனான நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, மீண்டும் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு இந்த டி20 உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரவி சாஸ்திரியின் தலைமையில் எண்ணற்ற தொடர்களை இந்திய அணி மூன்று வித போட்டிகளிலும் வென்றிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் வெற்றி இன்றியமையாதது. 

இரு அணிகளுக்கிடையேயான தொடரில் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும், ஐசிசி தொடர்களில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் போனது ஒரு கருப்புப் புள்ளியாகவே இன்றளவும் நீடிக்கிறது. இந்தத் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் விராட் கோலியும் தனது டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த தருணத்தில் ரவி சாஸ்திரி உடனான நட்பு மற்றும் அவருடன் பயணித்த அனுபவம் குறித்து பரிசளிப்பு நிகழ்வில் பேசினார். 

அதுமட்டுமல்லாது, ரவி சாஸ்திரிக்கு தனிப்பட்டமுறையில் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருப்பது அவர்களுக்கு இடையேயான நட்பை இன்னும் அதிகமாக உணரவைக்கிறது. விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில்,

” எண்ணற்ற நினைவுகளை பகிர்ந்துள்ளோம். உங்களுடன் ஒரு அணியாக பயணித்த இத்தனை ஆண்டுகாலம் மறக்க முடியாதவை. இந்திய அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீங்கள் அளித்ததால் வரலாறு நிச்சயம் உங்களை மறந்துவிடாது. இத்துடன் எதுவும் முடிவடையவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த உங்களது செயல்களுக்கு எனது வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்.” நெகிழ்வுடன் பதிவிட்டிருந்தார்.