அனைத்து கேப்டன்களும் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படங்கள்…. இவர் இல்லாததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இன்று (மார்ச் 31) மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த விழாவில், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இன்று (மார்ச் 31) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினமே (மார்ச் 29) அகமதாபாத் சென்றிருந்தது. அங்கு இறுதிக் கட்ட பயிற்சியில் சென்னை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான கோப்பையுடன், அணிகளின் கேப்டன்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களையும் ஐ.பி.எல். நிர்வாகம் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ள நிலையில், 9 அணிகளின் கேப்டன்கள் மட்டுமே அதில் இடம்பெற்றிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா, குழு புகைப்படத்தில் இல்லாதது மும்பை அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ரோஹித் சர்மா போட்டியில் கலந்துக் கொள்ள மாட்டாரா? என்ற சோகத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள். ‘ரோஹித் சர்மா’ பெயரில் ட்விட்டரில் ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதனிடையே, காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வீரர்கள் அடுத்தடுத்து ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது அணி நிர்வாகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், முதல் லீக் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிரடியைக் காட்ட ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை குஜராத் அணியுடனான இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி படுதோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here