சென்னை அணியில் இருக்கும் இரு முக்கியமான பிரச்சனை ; ஐபிஎல் 2023 தொடரில் தாக்கு பிடிக்குமா CSK ;

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இன்று (மார்ச் 31) மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த விழாவில், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இன்று (மார்ச் 31) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று முன்தினமே (மார்ச் 29) அகமதாபாத் சென்றிருந்தது. அங்கு இறுதிக் கட்ட பயிற்சியில் சென்னை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே, காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் வீரர்கள் அடுத்தடுத்து ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது அணி நிர்வாகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரிக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிகிச்சைப் பெற்று வருவதால் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, ஆகாஷ் சிங்கை நியமித்து ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இடதுகால் முட்டியில் காயம் ஏற்பட்டதால், அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் அவர் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் அவர் இன்றைய லீக் போட்டியில் கலந்துக் கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் தோனி பங்கேற்று விளையாடுவார்; 100% நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தல பத்ரம்” என்று குறிப்பிட்டுள்ளது. எனினும், காயம் காரணமாக, தோனி விளையாட விட்டால், அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்ப்படுகிறது. மேலும், அம்பத்தி ராயுடு விக்கெட் கீப்பராக செயல்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here