எந்தெந்த வீரர்களுக்கு எவ்வளவு ஊதியம்?- ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பி.சி.சி.ஐ.!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்றழைக்கப்படும் பி.சி.சி.ஐ (Board of Control for Cricket in India- ‘BCCI’) நேற்று (மார்ச் 26) 2022- 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஒப்பந்தம் அடிப்படையில் இடம் பெற்றுள்ள மூத்த வீரர்கள் மற்றும் அவர்களின் ஊதியம் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வீரர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ‘A+’ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 7 கோடியாகவும், ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 5 கோடியாகவும், ‘B’ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 3 கோடியாகவும், ‘C’ பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியாகவும் வழங்கப்படவுள்ளது.

எந்தெந்த வீரர்கள் எந்தெந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

‘A+’ பிரிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ‘A’ பிரிவில் ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்சர் படேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

‘B’ பிரிவில் புஜாரா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஷ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ‘C’ பிரிவில் உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஒப்பந்தமானது, கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4பட்டியலில் இடம் பெற்றுள்ள ரிஷப் பண்ட், காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.