சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓபனர்களாக களமிறங்கும் வீரர்கள் யார் தெரியுமா ?- எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!

0

மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் சீசன் 16ஆவது தொடர் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகவும், வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளுடனும் தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முக்கிய பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

அதைத் தொடர்ந்து மார்ச் 31- ஆம் தேதி இரவு, நடப்பு ஐ.பி.எல். சீசனுக்கான முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை முன்னாள் ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்க்கொள்கிறது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதல் போட்டியின் தொடக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்தெந்த வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒபனர்களாக டிவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வழக்கம் போல் களமிறக்க தோனி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகிய நட்சத்திர வீரர்கள் மிடில் வரிசையில் களமிறங்கி பேட்டிங்கில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹார், மகீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி ஆகியோர் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், முகேஷ் சௌத்ரிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

அவருக்கு பதிலாக மாற்று வீரரை தோனி தேர்வு செய்துள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் அசத்தும் என்றும், நடப்பு ஐ.பி.எல். கோப்பையையும் வென்று சாதனை படைக்கும் என்று கூறுகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 27) காலை 09.30 மணிக்கு தொடங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ரூபாய் 1,500 முதல் 3,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3- ஆம் தேதி அன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- லக்னோ அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அனைத்து கேலரிகளிலும் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், வழக்கத்தை விட அதிகளவு ரசிகர்கள் போட்டியை நேரில் காண வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here