‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்தடுத்து சிக்கல்’- காரணம் என்ன?

0

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். சீசன் 16ஆவது கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை கோலாகலமாக தொடங்கவுள்ளது.

தொடக்க விழாவில், திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று இரவு நடைபெற உள்ள நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டியில் முன்னாள் ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரிக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்த போது காயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, முகேஷ் சவுத்ரி காயத்துக்கு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரில் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, நியூசிலாந்து அணியின் வீரர் கைல் ஜேமிசன் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், காயம் காரணமாக, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், முகேஷ் சவுத்ரியும் சில போட்டிகளில் இருந்து விலகி இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2022- ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முகேஷ் சவுத்ரி 13 ஆட்டங்களில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், முகேஷ் சவுத்ரி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பாரா? இல்லையா? என்ற தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சென்னை அணியில் மட்டுமின்றி, மற்ற அணிகளிலும் வீரர்கள் காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here