16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், கடந்த மார்ச் 31- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.00 மணிக்கு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.


தொடக்க விழாவில், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை ஆகியவை இடம்பெற்றது. அதேபோல், டிரோன்கள் மூலம் ஐ.பி.எல். கோப்பை, அணிகளின் லோகோக்கள் ஆகியவை தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டனர்.
தொடக்க விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய 10 அணிகளின் கேப்டன்கள் கலந்துக் கொண்டனர்.


அதைத் தொடர்ந்து, அன்று இரவு 07.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே தோல்வி காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 03) இரவு 07.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைதானத்தில் போட்டி நடைபெறவிருப்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்- க்கு ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று பிறந்தநாள் ஆகும். இதையொட்டி, நேற்று (ஏப்ரல் 01) இரவு 09.00 மணிக்கு நட்சத்திர விடுதியில் இரவு விருந்தின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் புடைச் சூழ அவர் கேக் வெட்டினார். பின்னர், தோனி பயிற்சியாளருக்கு கேக் ஊட்டிவிட்டார். அதைத் தொடர்ந்து, சக வீரர்களும் அவருக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.
Happy Half Century, Coach! 🎂
Here’s to many more seasons in Yellove with you leading the way! 🥳 @SPFleming7 #WhistlePodu #Yellove @snj10000 pic.twitter.com/gLwx0ViZCv— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2023
இது குறித்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. மேலும், இதனை அணியின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
யார் இந்த ஸ்டீபன் பிளெமிங்- விரிவாகப் பார்ப்போம்!
நியூசிலாந்து அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்டீபன் ப்ளெமிங். இவர் 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,172 ரன்களையும், 280 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,037 ரன்களையும், 5 டி20 போட்டிகளில் விளையாடி 110 ரன்களையும், 10 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 196 ரன்களையும் எடுத்துள்ளார்.