ஐபிஎல் ரசிகர்களே..! இந்த ஆண்டு தோனி படைக்க வாய்ப்புள்ள சாதனைகள்..! ; இந்த தடவ மிஸ் ஆகாது ;

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இன்று (மார்ச் 31) மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த விழாவில், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இன்று (மார்ச் 31) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தோனி படைக்க வாய்ப்பு சாதனைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4,876 ரன்களையும், 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களையும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1,617 ரன்களையும், 234 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 4,978 ரன்களையும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், ஒரு இரட்டை சதம், 33 அரை சதங்களையும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களையும், 73 அரை சதங்களையும் விலாசியுள்ளார். டி20 போட்டிகளில் இரண்டு அரை சதங்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 24 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 240 சிக்ஸர்களை அடித்து, ரோஹித் சர்மா முதலிடத்தில் இருக்கும் நிலையில், 234 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, 229 சிக்ஸர்களை அடித்துள்ள தோனி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்னும் 21 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில், 250 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தோனி படைக்கவுள்ளார்.

அதேபோல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ள தோனி, இதுவரை சுமார் 234 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16 போட்டிகளில் தோனி விளையாடினால், 250 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் தோனி என்ற சாதனையைப் படைக்கவிருக்கிறார்.

அதாவது, 16 லீக் போட்டிகளில் கலந்துக் கொண்டு, சிறப்பாக விளையாடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் பட்சத்தில், அவர் இந்த சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 4,978 ரன்களை எடுத்த தோனி, நடப்பு தொடரில் விளையாடி இன்னும் 22 ரன்களை எடுக்கும் பட்சத்தில், 5,000 ரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையையும், தோனி எளிதாக அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

41 வயதான தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் போட்டியின் போது, தனது ஓய்வுக் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here