ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுகிறாரா…?- அதிரடியாகப் பதிலளித்த ரோஹித் சர்மா!

0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருடன், ஓய்வுப் பெறவிருப்பதாகவும், தனது ஓய்வு தொடர்பான அறிவிப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியின் போது அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்க தோனியின் ஒப்புதலுடன், அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை வென்று, அதனை தோனிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெறுகிறாரா? என்ற கேள்வியை செய்தியாளர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவிடம் முன் வைத்தனர்.

அதற்கு அவர் கூறியதாவது, “மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐ.பி.எல். ஆக இது இருக்கும் என்று இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் சில ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், ராஜஸ்தான் அணியின் வீரர் ரியான் பராக் (Rajasthan Royals’ Riyan Parag), தோனி குறித்து பேசியதாவது, “தோனி ஒரு ஃபினிஷர், அதில் அவர் தேர்ச்சிப் பெற்றுள்ளார். தோனியின் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் எப்படி போட்டியைத் தொடங்குகிறார்; போட்டியை ஆழத்திற்கு எப்படி எடுத்துச் செல்கிறார் என்பதைப் பார்த்துள்ளேன். ஃபினிஷர் ரோலில் தோனியைத் தவிர வேறு யாரும் தேர்ச்சிப் பெற்றதாக நான் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

234 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 24 அரை சதங்களுடன் 4,978 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 41 வயதாகும் தோனி தற்போது சினிமா தயாரிப்பு என பல்வேறு தொழில்களைத் தொடங்கி நடத்தி வரும் நிலையில், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

மற்ற வீரர்களை போல் தனது வயதைக் காரணம் காட்டி, ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை அணியுடனும், அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுடன் நெருங்கிய உறவு இருப்பதால், ஓய்வுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழுவிலோ, பயிற்சியாளராகவோ நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இல்லையென்றால், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என்று தகவல்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here