இது மட்டும் சரியாக நடந்தால் எங்களுக்கு தொடர் வெற்றி நிச்சியமாக கிடைக்கும் ; ஆனால்….! ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

போட்டி 35 : இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை என்றாலும் மிடில் ஆர்டரில் மில்லர், மனோகர் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த குஜராத் அணி 207 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் சக 4, சுப்மன் கில் 56, ஹர்டிக் பாண்டிய 19, மில்லர் 46, மனோகர் 42, ராகுல் திவேதிய 20* போன்ற வீரர்கள் ரன்களை அடித்துள்ளனர். பின்பு, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போல தோல்வி தான் காத்திருந்தது.

தொடக்கத்தில் இருந்து பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து கொண்டே வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இருப்பினும் மிடில் ஆர்டரில் நேஹால் வதேரா அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார். இறுதி ஓவர் வரை விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழந்த நிலையில் 152 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்ற நிலையில் 7வது இடத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் : “நிச்சயமாக வருத்தமாக தான் இருக்கிறது. நாங்க பவுலிங் செய்ய தொடங்கிய போது போட்டியை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக இறுதி நேரத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். எங்கள் பலமே பேட்டிங் லைன் தான்.”

“அதனால் இனிவரும் போட்டிகளில் எங்களை நாங்களே தைரியப்படுத்தி கொண்டு முன்னேற வேண்டும். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் இன்னும் கொஞ்சம் ஆழமாக பேட்டிங் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ரன்களை அடிக்க முடியும். இறுதியாக விளையாடிய போட்டியில் 216 ரன்களை நெருங்கினோம், ஆனால் தோல்வி தான் கிடைத்தது.”

“அதேபோல தான் இன்றைய போட்டியிலும் தொடக்க ஆட்டம் பெரிய அளவில் இல்லை. 200க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க வேண்டுமென்றால் தொடக்க ஆட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.” மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 7 போட்டிகளில் 181 ரன்களையும், இஷான் கிஷான் 7 போட்டிகளில் 183 ரன்களை அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.