“என் மாருமேல சூப்பர் ஸ்டாரு..” ரஜினி போட்டோவை நெஞ்சில் பச்சைக்குத்தி.. திகைக்க வைத்த ஹர்பஜன்!! 

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போட்டோவை நெஞ்சில் பச்சை குத்தியபடி புகைப்படம் வெளியிட்டிருக்கிறார் ஹர்பஜன் சிங்.

70, 80கள் முதல் தற்போது 2021 வரை இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னணி கதாநாயகனாக இருந்து வரும் ரஜினிகாந்த், தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது; ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களாலும் ‘தலைவர்’ என்றும் ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

தமிழகத்தில் எந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ.. அதேபோன்று பாலிவுட்டிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும், ஜப்பான், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது இயல்பான நடிப்பு, நம்முள் ஒருவரை போன்ற தோற்றம் மற்றும் அனைத்திற்கும் மேலாக மாறுபட்ட ஸ்டைல் என தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு திரையுலகில் உச்சம் பெற்றிருக்கிறார். சினிமா உலகிற்கு மிகப் பெரும் பங்காற்றிய ரஜினிகாந்திற்கு அண்மையில் ‘தாதா சாகிப் பால்கே’ எனும் உயரிய திரைத்துறை விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது ஒன்றிய அரசு. 

டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட விதமாக தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் தனது நெஞ்சில் ரஜினிகாந்தின் புகைப்படத்தை பச்சைக்குத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு, தமிழில் பதிவு செய்திருக்கிறார். ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்

“என் மாருமேல சூப்பர் ஸ்டார்”
80’s பில்லாவும் நீங்கள் தான்
90’s பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த் #rajnikanth

என்று குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளுக்கு முன்னணி கோலிவுட், பாலிவுட் மற்றும் சில இந்திய மொழி திரைப்படத்துறையினர் மற்றும் வெளிநாட்டு நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன்சிங் பதிவில் ரசிகர்கள் பலரும் கேளிக்கையாக கமெண்ட்டுகள் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.