“நான் பண்டியாகிட்ட அப்போவே சொன்னேன் கேக்கல.. இப்போ அனுபவிக்கிறாரு”; ஹார்திக் பண்டியாவிடம் சொன்ன உண்மையை இப்போது வெளியிட்ட சோயிப் அக்தர்!!

ஹார்திக் பாண்டியாவிடம் அன்றே எச்சரித்தேன். ஆனால் அவர்தான் கேட்கவில்லை என்று உண்மையை வெளியிட்டு இருக்கிறார் சோயிப் அக்தர்.

2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைக்கு பிறகு, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஹர்திக் பாண்டியா. உடல் நலம் தேறி மீண்டும் அணியில் இடம்பெற்ற பிறகும், முதுகுப் பகுதி பலவீனமாக இருந்ததால் பந்துவீச இயலவில்லை.

ஆகையால் இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் பந்துவீச முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.  கடந்த இரண்டு வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் பந்துவீசவில்லை. மேலும் இந்திய அணியிலும் நிரந்தரமாக இடம் பெறமுடியாமல் தவித்து வருகிறார். 

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒரு சில போட்டிகளில் வெளியில் அமர்த்தப்பட்டார். நியூசிலாந்து தொடரில் காயம் காரணமாக அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம்பெறவில்லை. இந்த முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக, ஹர்திக் பாண்டியாவிடம் அவரது முதுகுப்பகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சோயிப் அக்தர் தெரிவித்திருக்கிறார். சோயிப் அக்தர் கூறுகையில், “இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது, நான் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரிடமும் பேசினேன்.

இருவரும் மிகவும் ஒல்லியாக இருந்தார்கள். குறிப்பாக ஹார்பிக் பாண்டியாவின் முதுகு பகுதியை தொட்டுப் பார்த்தபோது, மிகவும் மெல்லியதாக இருந்தது. இதனால் அவர் எளிதாக காயம் ஏற்படக்கூடும். முழு கவனம் தேவை என்று எச்சரிக்கை படுத்தினேன். எச்சரித்து சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து, அதே போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். தற்போது வரை அந்த ஒரே காரணத்திற்காக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.” என்று யாரும் அறிந்திராத உண்மையை சோயிப் அக்தர் தெரிவித்திருக்கிறார்.

ஹார்திக் பாண்டியா விரைவில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அண்மையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் இது குறித்து தனது நேர்காணலில் பேசியது குறிப்பிடத்தக்கது.