“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு இவர் தான் தோனியின் வாரிசு”- முன்னாள் கிரிக்கெட் வீரர் புகழாரம்!

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், முதல் லீக் போட்டி, கடந்த மார்ச் 31- ஆம் தேதி அன்று இரவு 07.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட், 50 பந்துகளை எதிர்கொண்டு 92 ரன்களை எடுத்திருந்தார். இதையடுத்து, அதிக ரன்களை குவித்தவர்களுக்காக வழங்கப்படும் ஆரஞ்சு கேப் பட்டியலில் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கவிருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் ஐ.பி.எல். போட்டி நடைபெறவிருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர் சென்னை அணியின் ரசிகர்கள்.

இன்றைய போட்டியிலும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்கவிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், கடந்த இரண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு முன்பே, சென்னை அணிக்காக ரன் குவித்த போது, தனது சதத்தைப் பதிவுச் செய்திருந்தார்.

அவரை பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனினும், இந்திய அணிக்காக விளையாடுவதற்கு அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், சிறப்பாக விளையாடி வந்தால், இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்புவதற்கு அவர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு எம்.எஸ்.தோனியின் சிறந்த வாரிசாக ருத்துராஜ் கெய்க்வாட் இருப்பதாக நான் உணர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.