இப்படியும் ஒரு மோசமான சாதனையைப் படைத்த பெங்களூரு அணி வீரர்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், நேற்றைய போட்டி (ஏப்ரல் 02) அன்று இரவு 07.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

அப்போது, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 82 ரன்களையும், கேப்டன் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் எடுத்துள்ளனர். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், திலக் வர்மா 84 ரன்களையும், நேஹால் வதேரா 21 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்தினார். அதேபோல், நான்கு ஓவர்களை முகமது சிராஜ் வீசியுள்ளார்.

குறிப்பாக, 19ஆவது ஓவர்களில் பந்து வீசிய முகமது சிராஜ், 11 பந்துகளை வீசி ஐ.பி.எல். வரலாற்றில் நீண்ட ஓவர் வீசியவர், என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்ற நிலையில், 5 வைடு (Wide) பந்தை வீசியுள்ளார்.

நான்கு ஓவர்களை வீசியுள்ள முகமது சிராஜ், 21 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.