இதுமட்டும் நடந்தால்.. கிரிக்கெட்டை உதறிவிடுவேன்; விராட் கோஹ்லி ஓபன் டாக்!

அப்படியொரு தருணம் வந்தால் அன்றோடு கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவேன் என மனம் திறந்து பேசியிருக்கிறார் கேப்டன் விராட் கோலி.

இந்திய அணியில் ரசிகர்களால் ‘ரன் மெஷின்’ என செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி அணிக்கு பல முக்கிய பங்களிப்பை கொடுத்து மூன்றுவித  போட்டிகளுக்கும் கேப்டனாக உயர்ந்து, அதிலும் பல தொடர்களை வென்றெடுத்துள்ளார்.

இந்திய அணியில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் விராட் கோலி பேட்டிங்கில் சச்சினை நெருங்கக் கூடிய அளவிற்கு பல சாதனைகளை படைத்திருக்கிறார். அதேபோல் சச்சினை மிஞ்சும் அளவிற்கு சில சாதனைகளை தனதாக்கியிருக்கிறார். 

கடந்த 6, 7 ஆண்டுகளாக இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்து வரும் அவர் பல தொடர்களில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றாலும், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடர் இன்றியமையாதது. அதேபோல் தரவரிசைப் பட்டியலில் மூன்றுவித போட்டிகளிலும் இந்திய அணியை முதல் இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். 

இந்திய அணிக்கு மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணிக்காக பேட்டிங்கில் ஆயிரக்கணக்கான ரன்களை குவித்திருக்கிறார். ஒரே சீசனில் 4 சதங்கள் விளாசியது உட்பட இமாலய சாதனைகளை படைத்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் இத்தகைய பல சாதனைகளைப் படைத்து இருந்தாலும், ஐசிசி தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடர் என எதிலும் கோப்பையை வெல்லாது அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு தற்போதுவரை ஒரு கருப்பு புள்ளியாகவே இருந்து வருகிறது. 

இதற்கிடையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு, டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். டி20 உலக கோப்பையில் இந்திய அணி துரதிஸ்டவசமாக சூப்பர் 12 சுற்றில் இரண்டு தோல்விகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேற இயலாமல் வெளியேறியது. 

இந்த சுற்றின் கடைசி போட்டியில் நமீபிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு பரிசளிப்பு நிகழ்வில் பேசிய விராட்கோலி தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்தும், இந்திய வீரர்களின் ஒத்துழைப்பு, இந்திய அணி நிர்வாகம் அளித்த சுதந்திரம் என பலவற்றையும் பேசியிருக்கிறார். அதேபோல் தனிப்பட்ட ஆட்டம் குறித்தும் அவர் பேசியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 

மேலும் விராத் கோலி என்றாலே ஆக்ரோஷம் என பலரும் அறிவர். அது குறித்தும் அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார். விராட் கோலி கூறியதாவது: 

“நான் கேப்டன் பொறுப்பில் இருந்தாலும் சாதாரண வீரராக விளையாடினாலும் ஆக்ரோஷம் என்பது எனக்கு இயல்பான ஒன்று. அதை நான் ஒருபோதும் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. அப்படி மாற்றிக் கொள்ளும் மனநிலை வந்தால், அந்த தருணம் நான் கிரிக்கெட் விளையாட்டை நிறுத்தியிருப்பேன்.

நான் கேப்டன் பொறுப்பிற்கு வருவதற்கு முன்னதாகவே ஆக்ரோஷத்துடனே விளையாடினேன். அதை என்னை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களும் அறிவர். ஆகையால் அந்த குணத்தை நான் எப்போதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.” என்றார்.