இந்திய கிரிக்கெட் அணியில் இந்த பையன் இருப்பதை மறந்துவிட வேண்டாம் ; இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் ; கங்குலி ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள இளம்வீரர்களில் ஒருவர் பிரித்வி ஷா. 23 வயதான இவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2018- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4- ஆம் தேதி நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி அன்று நியூசிலாந்தில் நடந்த அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

பின்னர், 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா நாட்டின், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் தொடர்ச்சியாக, 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த பிரித்வி ஷா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் தனக்கான பெயரை நிலை நிறுத்தினார்.

எனினும், காயம் காரணமாகவும், பிட்னெஸ் காரணமாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் பிரித்வி ஷாவைத் தேர்வு குழு தேர்வு செய்யவில்லை. அவருக்கு பின்னால் வந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கிய, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 339 ரன்களையும், ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 189 ரன்களையும், ஒரு டி20 போட்டியில் பங்கேற்று ரன் எதுவும் எடுக்கவில்லை. 63 ஐ.பி.எல். போட்டிகளில் கலந்துக் கொண்ட பிரித்வி ஷா 1,588 ரன்களையும் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பி.சி.சி.ஐ.யின் தலைவருமான சவுரவ் கங்குலி, “பிரித்வி ஷா இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஆனால், அவருக்கு இந்திய அணியில் காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்து தான். ரோஹித் ஷர்மாவும், தேர்வாளர்களும், அவரை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார்” என்று கூறினார்.