இந்தியா-தென்னாப்பிரிக்கா: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சிஎஸ்கே வீரருக்கு இடம், தமிழக வீரருக்கு இடம் மறுப்பு!! 

0

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் சிலருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. வருகிற ஜனவரி 19ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையாதன் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இவர் தென் ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரின் போது புதிய கேப்டன் பொறுப்பை ஏற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா இல்லாததால் இந்த கேப்டன் பொறுப்பு கேஎல் ராகுலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் துணை கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கான அணியில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றுமொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்த அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 603 ரன்கள் அடித்த ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் 6 போட்டிகளில் இரண்டு சதங்கள் உட்பட 379 ரன்கள் அடித்த வெங்கடேச ஐயர் இருவரும் இந்த அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கானுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இவரும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரின்போது தனது மகளுக்கு முதல் பிறந்தநாள் வருவதால், விராட் கோலி ஒருநாள் தொடரில் இடம் பெறமாட்டார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தனது பேட்டியில் விராட்கோலி அதனை மறுத்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல், தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விராட் கோலி இருக்கிறார்.

இந்திய அணி:

கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பந்த் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), யுசி. சாஹல், ஆர். அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், தீபக் சஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here