ஸ்ரேயாஸ் அய்யர் எங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறார்; புலம்பித்தள்ளும் பேட்டிங் கோச்!!

0

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என பேட்டியளித்துள்ளார் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் 105 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களும் அடித்தது, அவருக்கு வரலாற்று சிறப்புமிக்க அறிமுகமாக அமைந்தது. 

இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் குறித்து பேட்டியளித்துள்ளார் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர். அவர் கூறுகையில், “இப்படி ஒரு அறிமுகம் கிடைத்தது வரலாற்று சிறப்புமிக்கது. இதனை அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் அவர் ஆடிய விதம், நிச்சயம் அவரது மனநிலையை குறிக்கிறது. இளம் வயதிலேயே இத்தகைய முதிர்ச்சியுடன் விளையாடுகிறார்.” என்றார். அணியில் அவரது இடம் நிரந்தரம் ஆக்கப்படுமா? என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த விக்ரம் ரத்தோர்,

“அடுத்த போட்டியில் கேப்டன் கோலி மீண்டும் அணியில் இணைய இருக்கிறார். முதல் போட்டி இன்னும் முடிவடையாத நிலையில், இரண்டாவது போட்டி குறித்து எதுவும் பேச இயலாது. மும்பை மைதானத்தில் நடைபெறுவதால், அங்கு சென்ற பிறகே முடிவு செய்யப்படும்.

இதுகுறித்து ராகுல், கோலி மற்றும் இன்னும் சிலருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். ஏற்கனவே அணியில் ஒரு இடத்திற்கு பல வீரர்கள் போட்டியாக இருப்பதால், ஸ்ரேயாஸ் அய்யர் இப்படி விளையாடியிருப்பது ஆரோக்கியமான தலைவலியாக இருக்கிறது.

இது சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்வதற்கு கடினமாக இருந்தாலும், இது அணியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கிறது என்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.” என்றார். முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவதற்கு முன்னர், டெஸ்ட் கேப்பை இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரிடம் ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றுக்கொண்டார்.

தற்போது முதல் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசி, அறிமுகப் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் கடந்த வெகுசில வீரர்களில் ஒருவராக ஸ்ரேயாஸ் அய்யர் இடம்பெற்றிருக்கிறார். அந்த பட்டியலில் சுனில் கவாஸ்கரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here