டிராவிட் சொன்ன அந்த ஒரு டிப்ஸ்; யாரும் அறியாத உண்மையைக்கூறிய ஸ்ரேயாஸ் அய்யர்!!

இரண்டாவது இன்னிங்சில் ராகுல் டிராவிட் கூறியதை செய்தேன். அரைசதம் அடிக்க உதவியது அதுதான் என்று உண்மையை தெரிவித்திருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தற்போது ஐந்தாவது நாளை எட்டியுள்ள இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

முதல் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். அவர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான சூழலில் களமிறங்கிய அவர், நிதானமாக விளையாடி இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் அடித்து, அணியை சற்று வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார். இதில் அவர் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததைவிட இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்தது பெரிதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் மைதானம் முற்றிலுமாக பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. பந்து சரியாக மேலே எழவில்லை என்பதால், பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமானதாக பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில் ஒரு அறிமுக வீரராக களமிறங்கி அரைசதம் அடித்திருப்பது அவ்வளவு எளிதல்ல.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியதற்கு முழு காரணமும் ராகுல் டிராவிட் தான் என மனம்திறந்து பேசியிருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர். அவர் கூறுகையில், “கான்பூர் மைதானம் எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்று தான். ஆனாலும் முன்புபோல் இல்லாமல், இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

இது குறித்து நான் டிராவிட் உடன் வினவியபோது, களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிறைய பந்துகள் விளையாட வேண்டும். நேரம் ஆகஆக மைதானத்தின் போக்கு புரிய ஆரம்பிக்கும். அந்த தருணத்தில் உனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று அறிவுறுத்தினார்.

அதனை நான் சரியாக பயன்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஆனாலும் இரண்டாவது இன்னிங்சில் எதிர்பாராத பந்தில் ஆட்டம் இழந்தது சற்று வருத்தமாக இருந்தது. இரண்டு இன்னிங்சிலும் நான் நன்றாக விளையாடினேன் என்பதைவிட என்னுடைய முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் எளிதில் விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல. ஆகையால் வெற்றி மட்டுமே எங்களது ஒரே இலக்காகும்.” என்றார்.