வெளிநாட்டுல இத்தனை சதங்கள் அசால்ட்டா அடிக்கிறீங்களே அது எப்படி? ; ரிப்போர்ட்டரின் கேள்விக்கு செம்மையான பதில் கொடுத்த கேஎல் ராகுல்!!

இந்திய மைதானங்களை விட வெளிநாட்டு மைதானங்களில் இத்தனை சதங்கள் அடிக்கிறீர்கள் அதன் ரகசியம் என்ன? எனக்கேட்ட பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் கே எல் ராகுல்.

30ம் தேதி நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், கே எல் ராகுல் சதம் அடித்திருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு கேஎல் ராகுலின் சதம் மிகவும் உதவிகரமாக இருந்தது. போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த விராட் கோலி, “முதல் போட்டியில் வெற்றிக்கு வித்திட்டது கேஎல் ராகுலின் சிறப்பான ஆட்டமும், மயங்க் அகர்வாலின் பக்கபலமாக பார்ட்னர்ஷிப் இரண்டும் தான்.” என்று புகழ்ந்திருந்தார். 

ராகுலுக்கு இது 7வது டெஸ்ட் சதமாகும். இவர் அடித்த 7 சதங்களில் 6 சதங்கள் இந்தியாவை விட்டு வெளியில் அடிக்கப்பட்டது. இரண்டு முறை இங்கிலாந்து மைதானங்களில் சதம் அடித்திருக்கிறார்.  இலங்கை ல், மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் தற்போது முதல் டெஸ்ட் போட்டியின்போது தென்னாப்பிரிக்காவில் என இந்தந்த நாட்டில் தலா ஒரு சதம் அடித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, கேஎல் ராகுல் ஒரு ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்டார். இது மட்டுமே இந்திய மைதானத்தில் அடிக்கப்பட்டதாகும். இப்போட்டியில் ராகுல் 199 ரன்கள் அடித்திருந்தார். இது அவரது தனிப்பட்ட அதிகபட்சமாகவும் இருக்கிறது. 

இந்திய வீரர்கள் பொதுவாக இந்திய மைதானத்தில் சிறப்பாக விளையாடுவார்கள். வெளிநாட்டு மைதானத்தில் சதம் அடிப்பது அரிதான ஒன்று. இந்நிலையில், கேஎல் ராகுல் வெளிநாட்டு மைதானங்களில் மிகச் சிறப்பாக விளையாடி வருவதற்கான ரகசியம் என்ன? என பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அட்டகாசமாக பதிலளித்த அவர்,

“நான் எனது ஆட்டத்தில் மாற்றங்கள் செய்து வந்திருக்கிறேன் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் மனதளவில் மட்டுமே மாற்றம் செய்தேன். எனது ஆட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் நான் செய்து கொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் நல்ல துவக்கம் கிடைக்க வேண்டுமென்றால் தன்னம்பிக்கையும் மனதளவில் உறுதியும் வேண்டும். 

நல்ல துவக்கம் கிடைத்த பிறகு பலரும் நிதானத்தை இழந்து விடுகின்றனர். நிதானம் மற்றும் அமைதியான மனநிலை இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு பந்தையும் நன்றாக கணித்து விளையாட முடியும். இதன் காரணமாக நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியும். 

பின்னர் தானாகவே உங்களுக்கு ரன்கள் வந்துவிடும். நான் இத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்ற மனநிலையில் மட்டுமே இருப்பேன். இதன் காரணமாகத்தான் வெளிநாட்டு மைதானங்களில் என்னால் இத்தனை சதங்கள் அடிக்க முடிந்திருக்கிறது என கருதுகிறேன்.” என்றார்.

வெளிநாட்டு மைதானங்களில் அதிக சதங்கள் அடித்த இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் சேவாக்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் கேஎல் ராகுல். இந்தப் பட்டியலில் 15 சதங்களுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் இருக்கிறார்.