பழிதீர்த்த நியூசிலாந்து.. என்னா அடி??!! முதல்முறை பைனலுக்கு முன்னேற்றம்!!

0

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றும் பைர்ஸ்டாவ் 13 ரன்களுக்கு ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி நல்ல துவக்கம் கிடைக்காமல் தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த மொயின் மற்றும் மாலன் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சினை சிறப்பாக எதிர்கொண்டு அணிக்கு ரன்கள் குவிக்க உதவினர். மலான் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், உள்ளே வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயீன் அலி அரைசதம் கடந்து 51 ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

சற்று கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்தில் 4 ரன்களுக்கும், கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி பெருத்த பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் கான்வே மற்றும் மிட்செல் இருவரும் விக்கெட் இழக்காமல் மெதுவாக ரன்களை குவிக்க துவங்கினர். 10 ஓவர்கள் முடிவில் 58 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறி வந்தது. 

அதன் பின்னர் மெதுவாக தங்களது அதிரடியை இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் துவங்கினர். கான்வே 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் மிச்சேல் நிலைத்து ஆடி வந்தார். அடுத்து வந்த ஃபிலிப்ஸ் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற,  இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகத் தொடங்கியது. கடைசி நான்கு ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்றபோது 17-ஆவது ஓவரை ஜோர்டான் வீசினார். அதில் ஜிம்மி நீசம் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் விலாச நியூசிலாந்து அணிக்கு தேவையான ரன்ரேட் அழுத்தம் குறைந்தது.

அடுத்து 18வது ஓவர் வீசவந்த அடில் ரஷித் ஓவரிலும் 14 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது 19வது ஓவரில் இரண்டு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை மிச்செல் விளாசினார். இதன்மூலம் 19வது ஓவரிலேயே நியூசிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றியையும் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here