நம்பிக்கை நாயகன் என்று நம்பிய வீரரும் சொதப்பல் ; குழப்பத்தில் இருக்கும் மும்பை ;

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், நேற்றைய போட்டி (ஏப்ரல் 02) அன்று இரவு 07.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.

அப்போது, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேப்டன் டூ பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 82 ரன்களையும், கேப்டன் டூ பிளெசிஸ் 73 ரன்களையும் எடுத்துள்ளனர். அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், திலக் வர்மா 84 ரன்களையும், நேஹல் வதேரா 21 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு அந்த அணியின் வீரர்களின் பந்து வீச்சே காரணம் என்று கூறப்படுகிறது. அந்த அணியின் பந்து வீச்சாளர்களான ஜாசன் பெஹ்ரென்டோர்ஃப், அர்ஷத் கான், ஜாப்ரா ஆர்ச்சர் (Jofra Archer), பியூஸ் சாவ்லா, கேமரூன் க்ரீன், ஹ்ரிதிக் ஷோகீன் (Hrithik Shokeen) ஆகியோர் பந்து வீசினர். இதில் அர்ஷத் கான் (Arshad Khan) மற்றும் கேமரூன் க்ரீன் (Cameron Green) தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சரை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி நம்பி இருந்தது. இவர் நான்கு ஓவர்களை வீசினார். இவரது பந்து வீச்சின் போது, மறுபுறம் பேட்டிங்கை செய்த விராட் கோலி பவுண்டரிகளை விளாசினார். சுமார் 33 ரன்களை விட்டுக் கொடுத்த ஜாப்ரா ஆர்ச்சர், ஒருவேளை பந்து வீசாமல், ‘இம்பேக்ட் பிளேயர்’ (Impact Player) விதிமுறையைப் பயன்படுத்தி மாற்று வீரரைக் களத்தில் இறக்கி இருந்தால், மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்று இருக்கலாம் (அல்லது) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்க முடியும் என்று கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.