சென்னை போட்டியை காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள் மட்டுமில்லை ; CSK அணியின் செல்ல பிள்ளையும் தான் … விசிட் அடித்த முன்னாள் வீரர்கள்!

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பதால் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக, சுமார் 1426 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, களமிறங்குவதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்றால் மிகையாகாது.

சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 40 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 17 போட்டி தோல்வியிலும், 1 போட்டி சமனிலும் முடிந்தது.

இந்த நிலையில், சென்னை போட்டியை நேரில் காண, உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா ஆகியோர் மைதானத்தில் உள்ள சிறப்பு கேலரியில் அமர்ந்து போட்டியைக் காண உள்ளனர்.

இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கிரிக்கெட் போட்டியைக் காண டிக்கெட்டுகளைக் கொடுத்து மைதானத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக, சுமார் 1,000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பேருந்து போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது. போட்டி முடிவடைந்தவுடன், ரசிகர்கள் வீடு திரும்ப ஏதுவாக, மெட்ரோ ரயில்வே நிர்வாகம், ரயில் சேவையை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் #Chepauk, #CSKvLSG, #Dhoni ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.