இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். சீசன் 16ஆவது கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று மாலை கோலாகலமாக தொடங்கவுள்ளது.
தொடக்க விழாவில், திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
வரும் மார்ச் 31- ஆம் தேதி அன்று இரவு நடைபெற உள்ள நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டியில் முன்னாள் ஐ.பி.எல். சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல். போட்டியில் களமிறங்க உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிட்டல் என அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் தொடர்ந்து, இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அத்துடன், தாங்கள் இடம்பெற்றுள்ள அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி வீரர்கள் டேவான் கான்வே, சாண்ட்னர், சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரவீந்திர ஜடேஜா, தோனி, ரஹானே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (மார்ச் 27) காலை 09.30 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க, ரசிகர்கள் அதிகாலையிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர்.
அதேபோல், இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை Patym மற்றும் www.insider.in ஆகிய இணைய தளப்பக்கங்களில் பதிவு செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 7 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நடைபெறுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.