‘சூர்யகுமார் யாதவ் Vs சஞ்சு சாம்சன்’…. சிறந்த வீரர் யார்?- சமூக வலைத்தளங்களில் அனல் பறக்கும் விவாதம்!

டி20 போட்டிகளில் பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்தியாவின் 360 டிகிரி சூழல் வீரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 2 அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். அதேபோல், 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் மூன்று சதங்கள், 13 அரை சதங்களை விளாசியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளார்.

11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 2 அரை சதங்களை அடித்துள்ளார். 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், ஒரு அரை சதத்தை விளாசியுள்ளார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் ஒரே ஒரு பாலை மட்டும் எதிர்கொண்டு, ஆட்டமிழந்து ‘கோல்டன் டக்’ ஆனது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இரண்டு ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்ட சூரியகுமார் யாதவ், கடைசி ஒருநாள் போட்டியில் ஏழாவது இடத்தில் களமிறக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், “இரண்டு வீரர்களில் யார் சிறந்தவர் என்று விவாதிப்பதே தவறு. சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்புபவர். இதனால் அவருக்கு அதிக போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் வாய்ப்பு வழங்கும்.

இதேபோல், சஞ்சு சாம்சனுக்கும் விரைவில் அதிக போட்டிகளில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கும். அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவால் கடைசி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட முடியும் என்பது தெரிந்தது தான்” என்றார்.