கோலி, ரோகித் இடத்தை காலி செய்ய இந்த பசங்க இருக்காங்க.. பாத்துகிட்டே இருங்க ; ரிக்கி பாண்டிங் சவால்!!

0

எதிர்காலத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரின் இடத்தை நிரப்ப இந்த வீரர்கள் சரியாக இருப்பார்கள் என பேட்டியளித்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அதன் பின்னர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இளம் வீரர்களைக் கொண்டு டெல்லி அணியை அடுத்தடுத்த தொடர்களில் பிளே ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றதால், இவரது பயிற்சி மீது அனைவரின் கவனமும் இருந்து வருகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி முடிவுக்கு வரும் நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்து பிசிசிஐ முதலில் ரிக்கி பாண்டிங்கை அணுகியது. அப்போது பிசிசிஐ அதிகாரிகளிடம், தான் கிட்டத்தட்ட 300 நாட்கள் இந்தியாவில் செலவழிப்பதாகவும், மீதமுள்ள நாட்களை குடும்பத்தினருடன் செலவழித்து வருவதாகவும் தெரிவித்ததோடு, பயிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றால், நிச்சயம் குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் இருக்காது. நான் அதனை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதையும் காரணமாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பேசிய அவர், இந்த பதவியை டிராவிட் எப்படி ஏற்றுக் கொண்டார் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவருக்கு சிறு வயதில் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் அவர் நேரம் செலவழிக்க விரும்புகிறாரா? இல்லையா? என்பது எனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சீனியர் வீரராக விளையாடி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளே அவர்களுக்கு இருக்கும் நிலையில், இந்த இடத்தை வேறு யார் நிரப்புவதற்கு சரியாக இருக்கும் என தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில்,

“டெல்லி அணிக்காக நான் பயிற்சி செய்யும் பொழுது பல இளம் வீரர்களை கையாண்டுள்ளேன். இந்தியாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு இடத்திற்கும் குறைந்தது 4, 5 வீரர்கள் திறமையானவர்களாக இருக்கின்றனர். மிகவும் இளம் வயதினராகவும் வருகின்றனர்.

ஆகையால் அணியில் சீனியர் வீரர்கள் சிறிய தவறு செய்தாலும் அந்த இடத்தை நிரப்ப இளைஞர்கள் காத்திருக்கின்றனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் இடத்திற்கும் வருங்காலங்களில் பிரித்வி ஷா, வெங்கடேச ஐயர், ருத்துராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என ஒரு இளம் பட்டாளமே இருக்கிறது.

ஆகையால் இந்திய அணியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்றே கூறலாம். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லை என்ற கவலையே வரும் காலங்களில் தேவையே இல்லை.” எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here