விராட் கோலி இனிமேல் இந்திய அணியில் இப்படித்தான் இருப்பார் என்று புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கு பிறகு, இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி ராஜினாமா செய்தார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பியதால், அப்பதவியை ராஜினாமா செய்யாமல் மௌனம் காத்து வந்தார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமுறை கோப்பைகளை வென்று தந்த ரோகித் சர்மாவிற்கு புதிய டி20 கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருந்தது.
லிமிடட் ஓவர் போட்டிகளில் 2 கேப்டன்கள் இருந்தால் அணியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் ஒரே கேப்டனாக இருப்பதற்கு பிசிசிஐ தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது. ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என விராட் கோலி சாதனை படைத்திருப்பதால் அவரை நீக்குவது அவ்வளவு எளிதல்ல.
ஆகையால், இதுகுறித்து நீண்ட ஆலோசனையில் தலைமை தேர்வுக்குழு ஈடுபட்டு வந்தது. விராட் கோலி தாமாக முடிவெடுத்து ராஜினாமா செய்வார் என்று தேர்வுக்குழு காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது நடக்காததால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு தனி கேப்டன் இருப்பது சரியில்லை என்று முடிவு செய்து விராட் கோலியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை ரத்து செய்தது. ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். இதனால் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோஹித் சர்மாவிடம், “இனி விராட் கோலியை எப்படி கையாள்வீர்கள்?.” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “இந்திய அணிக்கு விராட் கோலியின் பங்களிப்பு இன்றியமையாதது. எங்களுக்கு என்றும் அவர் தலைவர்தான்.
அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கேப்டன் பதவி மாற்றப்பட்டிருந்தாலும் அவரது பொறுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. பேட்ஸ்மேனாக எண்ணற்ற பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சராசரியாக 50 ரன்களுக்கும் அதிகமாக வைத்திருக்கிறார். அவரை போன்ற வீரர் அணியில் இல்லை என்றால், இழப்பு ஒட்டுமொத்த இந்திய அணிக்கே. ஆகையால் தொடர்ந்து அணியில் இருப்பார். தலைவராகவும் இருப்பார்.” என்று தெரிவித்தார்.
ரோகித் சர்மாவின் இத்தகைய பதில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.