“இவங்க விழுவது போல் கொஞ்சம் விழுவாங்க எதிரிகள் சுகம் காண…”- சென்னை அணி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹர்பஜன் சிங்!

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், நேற்று (மார்ச் 31) மாலை 06.30 மணிக்கு உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்றழைக்கப்படும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

தொடக்க விழாவில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் கேப்டன்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு நடந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 178 ரன்களை எடுத்துள்ளார். இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 92 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 63 ரன்களை எடுத்துள்ளார்.

குஜராத் அணி உடனான மூன்று போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததாலும், நடப்பு தொடரின் முதல் லீக் போட்டியிலேயே தோல்வி அடைந்ததாலும், சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கே செல்லாமல், தரவரிசை பட்டியலில் பின்தங்கியிருந்தது சென்னை அணி.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களையும், ரசிகர்களையும் உத்வேகமும், உற்சாகமூட்டும் வகையிலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “யுத்தத்துல முதல்ல யார் அடிக்குறாங்கன்னு கணக்கு இல்லை… முதல்ல யார் கீழே விழுறதுதான் கணக்கு…இவங்க விழுவது போல் கொஞ்சம் விழுவாங்க எதிரிகள் சுகம் காண… கவலை வேண்டாம் தலைவன் தோனி இருக்கிறான் மயங்காதே” என்று குறிப்பிட்டு, ஐ.பி.எல். நிர்வாகத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களையும் ட்விட்டரில் டேக் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here