“ரவீந்திர ஜடேஜாவை சமாதானப்படுத்திய தோனி”- காரணம் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா (வயது 34). கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

பேட்டிங், பவ்லிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர் ரவீந்திர ஜடேஜா. இதுவரை 210 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, 2,502 ரன்களை எடுத்துள்ளார். அத்துடன் 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு, கடந்த ஐ.பி.எல். தொடரில் கேப்டன் பதவியை வழங்கி கௌரவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம். எனினும், தொடர் தோல்விகள், கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படாது உள்ளிட்ட காரணங்களால், அந்த சீசனிலேயே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் தோனியை அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்திருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஜடேஜா, ஐ.பி.எல். தொடரின் பாதிலேயே வெளியேறினார்.

அத்துடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதையும், சில பதிவுகளையும் நீக்கியிருந்தார். இதன் காரணமாக, அவர் மீண்டும் சென்னை அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

எனினும், மெகா ஏலத்தில் ரவீந்திர ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து எடுத்துள்ளதால், அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை அணிக்காக விளையாட வேண்டும்.

அணி நிர்வாகம் அனுமதித்தால் மட்டுமே, அவர் வேறு அணியில் சேர்ந்து விளையாட முடியும் என்று கூறுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். எனினும், தற்போது 16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ள ரவீந்திர ஜடேஜா, தோனியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்சிக்கிடையே, ரவீந்திர ஜடேஜாவை, தோனி சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ரவீந்திர ஜடேஜா, கடந்த சீசனில் தனது கேப்டன் பதவியை அதிரடியாக நீக்கியது குறித்து அவரிடம் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, எதிர்கால கிரிக்கெட் போட்டிகள் குறித்தும், அணியின் செயல்பாடுகள் குறித்தும் ரவீந்திர ஜடேஜாவிடம் பேசிய தோனி, அவரை சமாதானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். அவரிடம் நீண்ட நேரம் பேசிய தோனி, இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா அணிக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை தோனி அவருக்கு விளக்கியுள்ளார்” என்றார்.

இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வுப் பெற இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here